Pages

Friday 13 July 2012

திருக்குர்ஆன் பாடம்: பதில் சொல்வது எப்படி?

திருக்குர்ஆன் பாடம்
 இன்று நாம் நிச்சயம் எதிர் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதிலும் குறிப்பாக அழைப்பு பணியில் இருப்பவர்களுக்கு கேள்விகள் என்பது தவிர்க்க முடியாதது. பதில் சொல்வதும் ஒரு கலைதான் என்று சொல்ல வேண்டும்.
இன்று நம்மில் பலர் விளக்கமாக பதில் சொல்கிறோம் என்ற பெயரில் பல நிமிடங்கள் சுற்றி வருவதை கண்டு வருகிறோம். இவ்வாறு செய்யும் போது, சில சமயம் கேள்வி கேட்டவருக்கு தான் கேட்ட கேள்வி என்ன என்பதே மறந்து விடுகிறது. இல்லையென்றால் பதில் அளிப்பவர் தான் என்ன சொல்ல வந்தோம் என்பதையே மறந்து விடுகிறார். புரியும் விதத்தில் பதில் அளிக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் நாம் சொல்ல கூடிய பதில் கேட்ட கேள்விக்கு பொருத்தமானதுதானா என்று முதலில் பார்க்க வேண்டும். அப்படியே பொருத்தமானது தான் என்றாலும் அதனை சுருக்கமாகவும் தெளிவாகவும் அளிக்க வேண்டும். இன்று விளக்கம் என்ற பெயரில் பல மணிநேரங்கள் வீணடிக்கப்படுவதைதான் நாம் கண்டு வருகிறோம்.
குர்ஆனும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையும் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்று தருகின்றன. நபி(ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தை எடுத்து வைத்த போது, அம்மக்கள் பல கேள்விகளை எடுத்து வைத்தார்கள். பெரும்பாலும் ஏகத்துவம், தூதுத்துவம் மற்றும் மறுமையை சுற்றியே அவர்களின் கேள்விகள் இருந்தன.
நபி(ஸல்) அவர்களை நபியாக ஏற்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை அம்மக்கள் முன்வைத்தனர். பூமியிலிருந்து ஊற்றை பீறிட்டு ஒட செய்ய வேண்டும், நபியவர்களுக்கு ஆறுகள் ஓடக்கூடிய தோட்டம் இருக்க வேண்டும், தங்க மாளிகை இருக்க வேண்டும், அல்லாஹ்வும் மலக்குமார்களும் வரவேண்டும், வானத்தில் ஏறிச் சென்று ஒரு வேதத்தை வாங்கி வர வேண்டும் என்று பல நிபந்தனைகளை வைத்தனர்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக ஒரு வாக்கியத்தைதான் கூறினார்கள். ‘நான் உங்களை போன்ற ஒரு மனிதன்தான்’ என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது. நபிமார்களும் மனிதர்கள்தான் என்பதை ஒரே வாக்கியத்தில் ஆணித்தரமாக உணர்த்தி விட்டார்கள்.
அடுத்து அந்த மக்கள் கேட்டார்கள் ‘அல்லாஹ் ஒரு மனிதரையா தூதராக அனுப்ப வேண்டும்?’ இதற்கும் நீட்டி விளக்காமல் ரத்தின சுருக்கமாக கூறினார்கள் ‘பூமியில் மலக்குகள் இருந்தால் வானத்தில் இருந்தும் ஒரு மலக்கே தூதராக வந்திருப்பார்’ என்று. கேட்டவர்களுக்கு பதிலும் கிடைத்தது. செய்தியும் தெளிவாக சென்று சேர்ந்தது.
பதில் அளிப்பதில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் தனக்கு தெரியாக விஷயங்களை தெரியாது என்று ஏற்றுக்கொள்வது. ஒரு அறிவுள்ள மனிதரிடம், மக்கள் பல துறை சார்ந்த கேள்விகளை கேட்பது வழக்கம் தான். அனைத்து துறைகள் குறித்தும் அந்த மனிதர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று நிர்ப்பந்தம் எல்லாம் எதுவும் கிடையாது. தனக்கு தெரியாத விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும் போது அதனை தெரியாது என்று ஏற்றுக்கொள்வது தான் சிறந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும் இத்தகைய கேள்விகள் கேட்கப்பட்டன. ‘மறுமை நாள் எப்போது வரும்?’ ‘ரூஹ் என்றால் என்ன?’ என்பன போன்ற கேள்விகள். இவற்றிற்கு நபி(ஸல்) அவர்கள் அடக்கமாக பதில் அளித்தார்கள் ‘இவை பற்றிய ஞானம் என்னுடைய இரட்சகனுக்கு தான் உள்ளது’ என்று.
ஆனால் ‘எனக்கு தெரியாது’ என்று கூறுவதை கௌரவ குறைச்சலாக நாம் நினைக்கிறோம். நாலு பேர் கேள்விகள் கேட்டார்கள் என்பதாலோ நாம் சொல்வதை எல்லாம் கேட்பதற்கு ஆள் இருக்கிறார்கள் என்பதாலோ தெரியாத துறையில் உள்ள கேள்விகளுக்கும் தெரிந்தது போல் பதில் அளிக்கிறோம். இவ்வாறு பதில் அளித்து பின்னர் அவமான பட்டவர்களும் உண்டு.
மற்றொரு குணமும் சில மக்களிடம் இருக்கிறது. தன்னுடைய தவறை நிலைநாட்ட அல்லது தன்னுடைய அதிகாரத்தை நிலை நிறுத்த எதிரில் நிற்பவரை தன்னுடைய வார்த்தைகளால் மட்டம் தட்டுவது. இஸ்லாத்தை குறித்தும் முஸ்லிம்கள் குறித்தும் அவதூறுகளை பரப்புவர்களிடம் இந்த குணத்தை தாராளமாக காணலாம். இவர்களுடன் உரையாடும் முஸ்லிம்கள் இவர்களின் வார்த்தைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர்கள் முன்னால் தலை தாழ்ந்து நிற்பதை காண்கிறோம். இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்பதையும் அல்குர்ஆன் கற்று தருகிறது.
மூஸா(அலை) அனைத்து அத்தாட்சிகளையும் கொண்டு வந்த பிறகும் பிர்அவ்ன் சத்தியத்தை ஏற்க மறுத்தான். மூஸா (அலை) அவர்களின் நிலையை மற்றவர்கள் முன் தாழ்த்த நினைத்தான். அதனை தன்னுடைய உரையாடலின் போது இவ்வாறு வெளிப்படுத்தினாhன். ‘மூஸாவே! நிச்சயமாக நாம் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்’ என்று கூறினான். (அல்குர்ஆன் 17:101).
தன்னுடைய இருமாப்பை முதலில் காட்டினான். பின்னர் தன்னுடைய வார்த்தைகளில் மூஸா (அலை) அவர்களின் நிலையை தாழ்த்த முயற்சித்தான். இதற்கு பதில் அளித்த மூஸா (அலை), ‘வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்;. ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று நான் எண்ணுகின்றேன்’ என்று கூறினார். (அல்குர்ஆன் 17:102)
ஃபிர்அவ்னின் போலித்தனத்தை வெளிப்படுத்திய அவர்கள் அவனின் நிலையையும் கூறி அவனை தடுமாற வைத்தார்கள்.
நம்முடைய கண்ணியத்தை எவரும் குழைக்க முயலும் போது அதனை கேட்டு வாய்மூடி மௌனமாக இருக்க கூடாது என்பதும் இங்கு நமக்கு கிடைக்கும் பாடம்.
ஆக பதில் சொல்லும் போது, தெளிவாக கேள்விக்கு ஏற்ற பதிலை சொல்ல வேண்டும். அதுவும் சுருக்கமாக இருக்க வேண்டும். இஸ்லாத்தின் கண்ணியத்தையும் நமது கண்ணியத்தையும் விட்டுக் கொடுக்காமல் நமது பதில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment